ஐ.டி.ஐ., மாணவர் தலையில் கல்லால் அடித்து, உடலை எரித்துக்கொலை. உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் சாலை மறியல் பரபரப்பு,  மாணவருடன் கண்மாய் பகுதிக்கு சென்ற 3 பேரை தேடும் காவல்துறையினர்.
கண்மாய்கரையில் கிடந்த இளைஞர் உடல்
மதுரை மாவட்டம் இளமனூர், கண்மாய் கரை பகுதியில் பாதி எரிந்த நிலையில் மனித உடல் கிடப்பதாக காவல்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சிலைமான் காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உடல் கிடந்த இடத்தில் இருந்து விசாரணையை தொடங்கினர். பின்னர் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். 

அப்போது காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அங்கிருந்து கைப்பற்றப்பட்ட உடலானது 20 வயதிற்கு உட்பட்ட நபரின் உடலாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். 
காலர் காட்டிக் கொடுத்த அடையாளம்
பின்னர் உடல் கிடந்த பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஐ.டி.ஐ., சீருடை காலரில் இருந்த டெய்லர் கடைக்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதே கலர் சீருடையை 4 பேர் தைத்து சென்றதாக கூறிய நிலையில், மதுரை ஒத்தக்கடைபகுதியை சேர்ந்த பிரசன்னா(17)  என்ற ஐடிஐ மாணவர் தவிர மற்ற 3 பேரும் வீட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பிரசன்னாவின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், சம்பவம் குறித்து கூறியுள்ளனர். பிரசன்னா நேற்று காலையில் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று இரவு வரை வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. பின்னர் பிரசன்னாவின் பெற்றோரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துசென்று, உடலை காட்டியபோது, அதில் கையில் 6 விரல்கள் இருப்பதும், உடல் கிடந்த பகுதியில் உள்ள காலணி ஆகியவற்றை பார்த்தபோது, அது பிரசன்னாவின் உடல் என உறுதிசெய்யப்பட்டது. பின்னர் சிலைமான் காவல்நிலையத்தில் பிரசன்னாவின் பெற்றோர் அளித்த புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்த சிலைமான் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மர்ம நபர்களை தேடும் போலீஸ்
முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விசாரணை நடத்தியபோது, பிரசன்னா உள்ளிட்ட 4 பேர் கண்மாய் பகுதிக்கு சென்றதை பார்த்ததாக கூறியுள்ளனர். இதனையடுத்து  இளமனூரில் பிரசன்னாவின் உடல் கிடந்த பகுதியில் கல் ஒன்று  ரத்தக்கறையுடன் கிடந்துள்ளது. எனவே பிரசன்னாவுடன் கண்மாய்கரைக்கு வந்தவர்கள் பிரசன்னாவை தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு, எரிக்க முயற்சித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிரசன்னாவுடன் வந்த 3 நபர்களை தேடி வருகின்றனர்.
உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர்
மேலும் பிரசன்னாவுடன் நெருக்கமாக உள்ள கல்லூரி நண்பர்களின் வருகை பதிவேடு குறித்தும் விசாரணை நடத்திய காவல்துறையினர், கொலை சம்பவத்திற்கான காரணம் குறித்து தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஐடிஐ மாணவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மாணவர் பிரசன்னாவின் குடும்பத்தினர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறை முன்பாக உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலைவாங்க மாட்டோம் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *