சென்னை: தமிழகத்தில் நீலகிரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மத்திய வங்கக்கடல் பகுதிக்கு சென்று படிப்படியாக வலுகுறையக்கூடும்.

மேலும், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்து தென் தமிழகம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஏப்.10) முதல் 15-ம் தேதி வரை பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லை.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 8 செ.மீ., விண்ட்வொர்த் எஸ்டேட்டில் 2 செ.மீ., தென்காசியில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *